சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) பேசிய கருத்துகளும், அதற்கு அவரது முன்னாள் மனைவி ஆர்த்தி கொடுத்துள்ள பதிலடியும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இப்படத்தில் ‘திருநாடன்’ என்ற மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரவி, விழாவில் பேசுகையில், “சுயமரியாதையை காப்பாற்றிக்கொள்ளவே என் வாழ்க்கையில் போராடினேன்; இந்தப் படமும் அத்தகைய கருத்தைக் கொண்டிருப்பதால்தான் இதில் நடித்தேன்” என்று குறிப்பிட்டார். மேலும், இயக்குனர் சுதா கொங்கராவுடன் பணிபுரிந்தது குறித்துப் பேசுகையில், “நல்ல பெண் அருகில் இருக்கும்போது பாதுகாப்பாக உணர்ந்தேன்; அங்கு ஈகோ கிடையாது” என்று கூறியது, மறைமுகமாக ஆர்த்தியை சாடுவது போல் இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
ரவி மற்றும் ஆர்த்தி இடையே தற்போது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஏற்கனவே ஆர்த்தி தரப்பு தனக்கு உரிய மரியாதையைத் தரவில்லை என்பதையே ரவி தனது பிரிவிற்கான முக்கியக் காரணமாகக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இசை வெளியீட்டு விழாவில் ரவி பேசிய “சுயமரியாதை” குறித்த பேச்சு, ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினரைத் தாக்கிப் பேசியதாகவே பார்க்கப்படுகிறது. பல வருடங்கள் ரவி அமைதியாக இருந்த நிலையில், இப்போது பொது மேடையில் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியது திரைத்துறையினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரவியின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு காட்டமான பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில், “வார்த்தைகளை அளந்து பேச வேண்டும்; கர்மா எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார். இது ரவிக்கு விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. விவாகரத்து விவகாரத்தில் சமரசம் ஏற்படாத சூழலில், ஒருவரை ஒருவர் பொதுவெளியில் தாக்கிப் பேசி வருவது இவர்களது பிரிவை மேலும் சிக்கலாக்கியுள்ளது. ‘பராசக்தி’ படத்தின் ரிலீஸுக்கு இடையே இவர்களது தனிப்பட்ட வாழ்க்கைப் போர் தற்போதைய ஹாட் டாபிக் ஆகியுள்ளது.
