Posted in

“இந்தியா வர பயமாக இருக்கு” : ஐபிஎல் நீக்கத்தால் ஆத்திரமா?

பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பையை இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்துகின்றன. இதில் வங்கதேச அணி தனது லீக் போட்டிகளை கொல்கத்தா மற்றும் மும்பையில் விளையாட வேண்டியுள்ளது. ஆனால், இந்தியாவில் தங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, தங்களது அனைத்துப் போட்டிகளையும் இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) இரண்டாவது முறையாக ஐசிசி-க்கு (ICC) கடிதம் எழுதியுள்ளது.

ஏன் இந்த முரண்பாடு?

இந்த விவகாரத்தின் பின்னணியில் விளையாட்டுத் தாண்டி அரசியல் மற்றும் ஐபிஎல் (IPL) விவகாரங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது:

முஸ்தாபிசுர் ரஹ்மான் விவகாரம்: சமீபத்திய ஐபிஎல் ஏலத்தில் ரூ. 9.20 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியால் எடுக்கப்பட்ட முஸ்தாபிசுர் ரஹ்மான், பிசிசிஐ-யின் உத்தரவின்படி நீக்கப்பட்டார். இது வங்கதேச கிரிக்கெட் வாரியத்தை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

பாதுகாப்பு கவலைகள்: வங்கதேசத்தில் நிலவும் உள்நாட்டு வன்முறைகள் மற்றும் அங்கு இந்துக்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதைச் சுட்டிக்காட்டி, தங்கள் நாட்டு வீரர்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என வங்கதேசம் வாதிடுகிறது.

ஐசிசியின் நிலைப்பாடு என்ன?

முன்னதாக வங்கதேசம் அளித்த முதல் கடிதத்திற்கு ஐசிசி பிடிகொடுக்கவில்லை. மாறாக, இந்தியாவில் என்ன மாதிரியான பாதுகாப்புப் பிரச்சினைகள் உள்ளன என்பது குறித்து விரிவான விளக்கம் கேட்டிருந்தது. தற்போது இரண்டாவது கடிதத்தில், வங்கதேச விளையாட்டு அமைச்சகத்தின் ஆலோசனையின்படி அந்த நாடு விரிவான காரணங்களைப் பட்டியலிட்டுள்ளது. இருப்பினும், போட்டி அட்டவணையை மாற்றுவது குறித்து ஐசிசி இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கவில்லை.

சரன் கடந்த 12 வருடங்களாக அதிர்வு இணைய ஆசிரியராக கடமையாற்றி வருகிறார். ஒரு மூத்த பத்திரிகையாளர்.