Posted in

வெளியான விஜயின் அறிக்கை இதோ: பாதுகாப்பின் அடையாளம் தான் விசில் !

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ‘ஜனநாயகன்’ படப் ரிலீஸ் சிக்கல் மற்றும் சிபிஐ (CBI) விசாரணை எனப் பல முனைகளில் நடிகர் விஜய் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார். இவ்வளவு அழுத்தங்களுக்கு மத்தியிலும், தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) அரசியல் வியூகங்கள் சற்றும் குறையாமல் பாய்ந்து வருகின்றன. கட்சி ஆரம்பித்து சில மாதங்களே ஆன நிலையில், தங்களுக்கு என ஒரு தனித்துவமான சின்னம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் இருந்த தொண்டர்களின் கேள்விக்கு, இப்போது தேர்தல் ஆணையம் ஒரு மாஸான விடையைக் கொடுத்துள்ளது.

விஜய் தரப்பில் கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தில் விசில், கால்பந்து மற்றும் வெற்றிக் கோப்பை உள்ளிட்ட சின்னங்கள் பரிந்துரைக்கப்பட்டன. அதனைப் பரிசீலித்த தேர்தல் ஆணையம், தற்போது தமிழக வெற்றிக் கழகத்திற்கு ‘விசில்’ (Whistle) சின்னத்தை ஒதுக்கி அதிகாரப்பூர்வ உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் டிவிிகே வேட்பாளர்கள் ஒரே சின்னமான விசில் சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இந்த அறிவிப்பு தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.

நன்றி தெரிவித்து விஜய் அறிக்கை – என்ன செல்லியிருக்கிறார்

இந்த நிலையில், தவெக-விற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விசிலின் சிறப்புகளையும் அவர் விவரித்துள்ளார். அவரது அறிக்கை இதோ…

“என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.

தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முதன்மை சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அரசியல் வரலாற்றின் முதல் வெற்றி அத்தியாயம் தொடங்கியிருக்கிறது.

இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கான தேர்தல் சின்னத்திற்காக நாம் விண்ணப்பித்திருந்த சின்னங்களில் ஒன்றுதான் விசில்.
தற்போது தேர்தல் ஆணையம் நமக்கு அந்த விசில் சின்னத்தையே ஒதுக்கீடு செய்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம். இதற்காகத்
தேர்தல் ஆணையத்திற்குக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

விசில் என்பது மனிதர்களின் ஆனந்த ஆர்ப்பரிப்பின் வெளிப்பாடாக எழும் ஒலி.
ஓய்வறியாமல் இலக்கை நோக்கி உழைப்பவர்கள், அவ்விலக்கை அடைந்ததும் குதூகலத்தில் எழுப்பும் பேரொலி.
இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், மக்களின் பாதுகாவலர்கள் கையில் இருப்பதுதான் விசில். அந்த வகையில், விசிலைப் பாதுகாப்பின் அடையாளம் என்றும் குறிப்பிடலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள், பெண்கள் என அனைவரின் உள்ளங்களிலும் உதடுகளிலும் எழும் விசில் ஒலி நேர்மறை நிகழ்வின் குறியீடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகம் ஈட்டப்போகும் வெற்றியை முன்கூட்டியே கணித்துக் கட்டியம் கூறும் வெகுஜன மக்களுக்கு நெருங்கிய சின்னமான விசில் நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதே நமக்கான ஊக்கமும் உத்வேகமும் என்பதே இயற்கையும் இறைவனும் நமக்கு அளித்திருக்கும் பரிசு.

நமது சின்னம் விசில்.
நல்லவர்கள் சின்னம் விசில்.
நாடு காப்பவர்கள் சின்னம் விசில்.
ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில்.
ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே சின்னம் விசில்.
வெற்றிச் சின்னம் விசில்.

வருகிற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம்.
விசில் போடுவோம்.“

இவ்வாறு விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளர். தவெக-விற்கு பொதுச் சின்னமாக விசில் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தவெக தலைமை முதல் தொண்டர்கள் வரை மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

For the past two decades, Mr. Kannan has served as the Editor of Athirvu News. A veteran of the diaspora, he stands as a highly respected and seasoned journalist, shaping the voice of the Tamil community for over 20 years.