நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமின் அடையாளங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க வாண்டல் தேவாலயம் (Vondel Church), புத்தாண்டு நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உருக்குலைந்தது. 154 ஆண்டுகள் பழமையான இந்தக் கட்டடம் தீயில் எரிந்து சாம்பலான சம்பவம் அந்த நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புத்தாண்டு பிறந்த சில நிமிடங்களிலேயே, அதாவது நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயின் வேகம் மிக அதிகமாக இருந்ததால், தேவாலயத்தின் கோபுரம் மற்றும் மேற்கூரை அப்படியே சரிந்து விழுந்தன. 1872-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்தத் தேவாலயம், தற்போது நிகழ்வுகள் நடத்தும் இடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடியும், கட்டடத்தின் பெரும்பகுதியை மீட்டெடுக்க முடியாமல் போனது.
இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தேவாலயத்திற்கு அருகில் இருந்த குடியிருப்புகளில் வசித்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தீயணைப்புத் துறையினர் அதிகாலை வரை போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், கட்டடம் இனி பயன்படுத்த முடியாத அளவிற்கு முழுமையாகச் சேதமடைந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்திற்கான அதிகாரப்பூர்வக் காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வானவேடிக்கைகள் (Fireworks) விடப்பட்ட சில நிமிடங்களிலேயே தீ தொடங்கியுள்ளது. எனவே, பட்டாசுகளால் ஏற்பட்ட தீப்பொறி தேவாலயத்தின் மீது விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தத் தேவாலயம், புகழ்பெற்ற ரிஜ்க்ஸ்மியூசியம் (Rijksmuseum) மற்றும் ஆம்ஸ்டர்டாம் சென்ட்ரல் ரயில் நிலையத்தை வடிவமைத்த அதே கட்டிடக்கலை நிபுணரான பியர் குய்ப்பர்ஸ் (Pierre Cuypers) என்பவரால் வடிவமைக்கப்பட்டது. ஒரு மிகச்சிறந்த வரலாற்றுப் பொக்கிஷத்தை ஆம்ஸ்டர்டாம் நகரம் இழந்துவிட்டதாகக் கட்டிடக்கலை ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
