Posted in

புட்டினையும் இப்படி கைது செய்தால் நல்லது- உக்ரைன் அதிபர் அடித்த ஜோக் !

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் அதிரடியாகக் கைது செய்து கடத்திச் சென்ற சம்பவத்தைத் தொடர்ந்து, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி விடுத்துள்ள கருத்து சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை அன்று ஐரோப்பிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெலென்ஸ்கி, “சர்வாதிகாரிகளை இப்படித்தான் கையாள வேண்டும் என்றால், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது அமெரிக்காவிற்கு நன்றாகவே தெரியும்” என்று ஒரு புன்னகையோடு தெரிவித்தார்.

வெனிசுலாவின் மதுரோவை அமெரிக்கா கையாண்ட விதம் போல, உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும் என்பதே ஜெலென்ஸ்கியின் இந்த கருத்தின் உள்நோக்கமாகப் பார்க்கப்படுகிறது. “அமெரிக்கா நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்” என்பதை இந்தச் சம்பவம் நிரூபித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், புதினைக் குறிவைத்து டொனால்ட் ட்ரம்ப் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மறைமுகமாக வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு அழைத்து வரப்பட்ட நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுகளை அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் போண்டி (Pam Bondi) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். மதுரோ மீது போதைப்பொருள் பயங்கரவாதச் சதி (Narco-Terrorism Conspiracy), கோகோயின் கடத்தல் சதி, மற்றும் அமெரிக்காவிற்கு எதிராகப் பேரழிவு தரும் ஆயுதங்களை வைத்திருந்தது உள்ளிட்ட நான்கு முக்கியக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

நியூயார்க் நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், “அவர்கள் விரைவில் அமெரிக்க மண்ணில், அமெரிக்க நீதிமன்றங்களில் அமெரிக்க நீதியின் முழு சீற்றத்தை எதிர்கொள்வார்கள்” என்று பாம் போண்டி எச்சரித்துள்ளார். மதுரோவின் மனைவி மீது என்னென்ன வழக்குகள் பதியப்பட்டுள்ளன என்பது குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், இருவரும் அமெரிக்க சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்பது உறுதியாகியுள்ளது.

சரன் கடந்த 12 வருடங்களாக அதிர்வு இணைய ஆசிரியராக கடமையாற்றி வருகிறார். ஒரு மூத்த பத்திரிகையாளர்.